எங்களுக்கும் காலம் வந்தது...
செதுக்கிய உடலமைப்பும் கட்டுமஸ்தான தோள்வன்மையும் ஆண்களுக்கு மட்டும்தான் என்ற கருத்துக் கொண்டிருப்பவர்கள் உடனடியாக அதை மாற்றிக் கொள்ளுங்கள்.


செதுக்கிய உடலமைப்பும் கட்டுமஸ்தான தோள்வன்மையும் ஆண்களுக்கு மட்டும்தான் என்ற கருத்துக் கொண்டிருப்பவர்கள் உடனடியாக அதை மாற்றிக் கொள்ளுங்கள்.
ஆண்களுக்கு நிகராக எங்களாலும் முடியும் என்று நிரூபித்திருக்கிறார் தீபிகா சௌத்ரி.
மஹாராஷ்டிராவைச் சேர்ந்த தீபிகாவுக்கு வயது 30. திருமணமானவர். அகில உலக உடலமைப்புப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற முதல் இந்தியப் பெண்மணி இவர்!
நடுத்தரக் குடும்பத்திலிருந்து வந்த இவர் பயோடைவர்சிட்டி படிப்பில் முதுநிலைப் பட்டம் பெற்றவர். தேசிய வைராலஜி கழகத்தில் உதவித் தொழில் வல்லுநராகக் கடந்த ஒன்பது ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறார்.
அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் கடந்த மார்ச் மாதம் நடந்த பாடிபில்டிங் சாம்பியன் போட்டிகளில் கலந்துகொண்டு இரண்டு நிலைகளில் பரிசை வென்று சாதனை படைத்திருக்கிறார் தீபிகா.
""இதற்காகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கடுமையான பயிற்சிகளை மனக்கட்டுப்பாட்டுடன் மேற்கொண்டதால் இந்த வெற்றி கிடைத்தது'' என்கிறார் இவர்.
2012 ஆம் ஆண்டு தில்லியில், உலகப்புகழ்பெற்ற ஷேனான் டே நடத்திய செமினார் ஒன்றில், பார்வையாளராகக் கலந்துகொண்டபோது இவர் மனதில் ஏற்பட்ட மாற்றம்தான் இந்தத் துறைக்கு இவர் வருவதற்குக் காரணமாக அமைந்தது.
""உலகப் புகழ்பெற்ற பாடிபில்டர்களை மேடையில் பார்த்தபோது, நானும் அவர்களைப் போல மேடையில் தோன்ற வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதற்காக புனேவில் உள்ள பாம்ப்ஷெல் ஃபிட்னஸ் மையத்தில் உறுப்பினராகச் சேர்ந்தேன். அங்கு உணவுக் கட்டுப்பாடு மற்றும் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டேன். 2013-ஆம் ஆண்டு ஃப்ளோரிடாவில் நடந்த பயிற்சி முகாமிலும் கலந்து கொண்டு எனது உடலைச் செதுக்கிக் கொண்டேன். தினமும் ஒன்றரை மணி நேரம் பளுதூக்கும் பயிற்சிகளை மாலை நேரத்தில் மேற்கொள்வேன். உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டிய உணவு வகைகளை மட்டுமே சாப்பிடுவேன். அதில் ஒருபோதும் காம்ப்ரமைஸ் செய்து கொள்வதில்லை. மேலும் மிக அதிக அளவு கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பேன். இவையே எனது இந்த வெற்றிக்கு மூலதனம்'' என்று கூறும் தீபிகா தனது முதல் முயற்சியிலேயே இந்தச் சாதனையைப் படைத்திருப்பது பெருமைக்குரிய விஷயம்.
இவரது முயற்சிகளில் கணவரது பங்கு அளப்பரியது. கணவர் வீட்டார்கள் இவரது முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட முயற்சித்த போதும், விடாப்பிடியாகக் கணவர்தான் இவருக்கு ஊக்கமும் ஒத்துழைப்பும் கொடுத்து இவரை இந்த நிலைக்கு உயர்த்தியிருக்கிறார் என்று கணவர் பெருமை பேசும் இவர், ""இந்தியாவில் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் பெரும்பாலானோருக்கு அக்கறை இல்லை; நமது குழந்தைகளுக்கு இதன் முக்கியத்துவத்தை நாம் எடுத்துக்கூறுவதில்லை; அப்புறம் இந்த முயற்சியில் இறங்கும் பெண்களுக்கு இந்தியாவில் மரியாதை இல்லை'' என்றும் வருத்தப்படுகிறார்.
""என்னால் சாதிக்க முடிந்ததை எல்லோராலும் சாதிக்க முடியும்...'' என்ற நம்பிக்கை மட்டும் இவருக்குக் குறையவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...